X

சென்னையில் மழை தொடர்ந்தாலும் சீராக மின் விநியோகம் செய்யப்படுகிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை கே.கே.நகர் துணை மின் நிலையத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் தேங்கினாலும் மின் வினியோகம் பாதிக்காதவாறு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகள், ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 10 துணை மின் நிலையங்களில் உள்ள 16 மின்மாற்றிகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இப்போது அந்த இடத்திலிருந்து 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. சீரான மின் வினியோகம் செய்வதற்காக 2 ஆயிரத்து 700 பில்லர் பாக்ஸ் தரையிலிருந்து 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி சீரான மின்வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 1,440 பேரும், இரவு நேரங்களில் 600 பேரும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையை பொறுத்துவரை 1,800 பீடர்கள் மொத்தம் இருக்கிறது. அதில் ஒன்று கூட மின்வினியோகம் நிறுத்திவைக்கப்படவில்லை. 100 சதவீதம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எல்லா பகுதியிலும் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த வடகிழக்கு பருவமழையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக ஏறத்தாழ 18 ஆயிரத்து 380 மின்மாற்றிகள் கையிருப்பு உள்ளன. அதே போல 5 ஆயிரம் கி.மீ அளவுக்கு மின்கடத்திகள் கையிருப்பு உள்ளன. 1.5 லட்சம் மின்கம்பங்கள் உள்ளன. கூடுதலாக 50 ஆயிரம் மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் இருக்கிறது. எனவே, மின்வினியோகத்தை பொறுத்தவரைக்கும் தமிழகம் முழுவதும் சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் பெய்த மழையால் எந்தவித பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்வினியோம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முதல்-அமைச்சரின் வழிக்காட்டுதலின்படி எடுத்த நடவடிக்கையின் காரணமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 40 ஆயிரம் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மின்கம்பிகளை பொறுத்தவரைக்கும் 1,800 கி.மீ அளவுக்கு புதிதாக மாற்றப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர், இந்த வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பு ஆய்வு கூட்டங்களை நடத்தி ஒவ்வொரு துறைகளில் என்னென நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன்படி, நடவடிக்கைகள் மேற்கொண்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.