சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் பல பகுதிகளில் வடியவில்லை.
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திருவொற்றியூர், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், ராயபுரம், மணலி, திரு.வி.க.நகர், அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.
வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் ஏராளமான மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
இதனால் சென்னை மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 7-ந்தேதி மட்டும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 870 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. 8-ந்தேதி 5 லட்சத்து 61 ஆயிரத்து 400 பேருக்கு உணவு வழங்கினார்கள். நேற்று காலை டிபன் 1 லட்சத்து 96 ஆயிரத்து 660 பேருக்கு வழங்கப்பட்டது.
மதிய சாப்பாடு 2 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கும், இரவு சாப்பாடு 2 லட்சத்து 13 ஆயிரத்து 800 பேருக்கும் வழங்கப்பட்டது.
இன்றும் 2 லட்சம் பேருக்கு சாப்பாடு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் கூறுகையில், அம்பத்தூர், மேனாம்பேடு, கொரட்டூர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க மாநகராட்சி நிர்வாகம் 2 திருமண மண்டபங்களில் சாப்பாடு தயார் செய்து மழை நீர் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று வினியோகம் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
நிவாரண முகாம்கள் திறந்திருந்தாலும் மக்கள் அங்கு வந்து தங்காமல் சாப்பாடு வாங்கிச் செல்கின்றனர். அவர்களுக்கு தாராளமாக 3 வேளையும் சாப்பாடு வழங்கப்படுகிறது என்றார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் பள்ளிக்கூடங்கள், சமுதாய நலக்கூடங்களில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு 160 முகாம்கள் திறந்து வைத்துள்ளோம். ஆனாலும் முழுமையாக யாரும் இங்கு வந்து தங்குவதில்லை. வந்து விட்டு வீட்டுக்கு சென்று விடுகிறார்கள்.
ஆனாலும் அவர்கள் தேவைக்காக ரவா உப்புமா, பொங்கல், சாம்பார் சாதம் தயார் செய்து வழங்குகிறோம். இன்று 15 மண்டலங்களிலும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 300 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.