Tamilசெய்திகள்

சென்னையில் போலி கால்சென்டர் நடத்தி மோசடி – 4 பேர் கைது

சென்னையில் போலி கால்சென்டர் நடத்தி ஆயிரம் பேரிடம் கோடி கணக்கில் பணமோசடி செய்ததாக 4 பேர் கைதாகி உள்ளனர். இந்த கும்பலினரிடம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் நீதிபதிகளும் தப்பவில்லை. அவர்களிடம் பணம் பறித்தது விசாரணையில் அம்பலமானது.

வங்கிகளில் கடன் வாங்கி தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கவர்ச்சியாக பேசி பொதுமக்களிடம் இருந்து பணத்தை மோசடி கும்பல் பறித்து உள்ளது. இதில் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண தொழிலாளிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணத்தை பறிகொடுத்து உள்ளனர். அவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடி குறித்து புகார் அளித்தனர். அதன்அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மோசடி கும்பல் ஒரு பெரிய நெட்வொர்க் அமைத்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்தது தெரியவந்தது.

இந்த மோசடி குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் நிருபர்களுக்கு விளக்கி கூறினார்.

அவர் கூறியதாவது:-

சென்னையில் வேலை இல்லா திண்டாட்டத்தை பயன்படுத்தி, படித்த அப்பாவி இளைஞர்களை ஒரு மோசடி கும்பல் தங்களது மோசடிக்கு பயன்படுத்தி உள்ளனர். இந்த இளைஞர்கள் ஐ.டி.நிறுவனங்களிலும், செல்போன் நிறுவனங்களிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து, பின்னர் வேலையை இழந்தவர்கள் ஆவார்கள்.

மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த இளைஞர்களை தங்களது போலியான கால் சென்டர்களில் வேலைக்கு சேர்த்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் பொதுமக்களின் செல்போன் எண்களை சேகரித்து அவர்களுக்கு போனில் பேசுவார்கள். குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக இவர்கள் சொல்வார்கள். இவர்களின் இனிப்பான பேச்சுக்கு மயங்கி, வங்கியில் கடன் வாங்க ஆசைப்படுபவர்களிடம், அவர்களின் ஆதார் எண், வங்கி ஏ.டி.எம். ரகசிய குறியீட்டு எண், வங்கி கணக்கு விவரம், பான் கார்டு விவரம் போன்றவற்றை சேகரித்து, அதன் மூலம் மோசடி வலையை வீசுவார்கள்.

பின்னர் வங்கி கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் முதலில் முன்பணம் கட்ட வேண்டும் என்று இவர்கள் சொல்லுவார்கள். அந்த முன்பணத்தை தங்களது வங்கிக்கணக்கில் போடச்சொல்லுவார்கள். அந்த பணத்தை சுருட்டுவார்கள்.

பின்னர் அவர்களது ஓ.டி.பி. எண்ணை வாங்கி, அதன் மூலம், அவர்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் ஆன்லைன் மூலம் எடுத்து ஏப்பம் போட்டு விடுவார்கள். இது ஒருவகையான மோசடி.

இதேபோல, வங்கியில் இருந்து அதிகாரி பேசுவது போல பேசி, ஏ.டி.எம்.கார்டை புதுப்பித்து தருவதாக சொல்லி, ஏ.டி.எம்.கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை வாங்கியும் இன்னொரு வகையான நூதன மோசடியில் ஈடுபடுவார்கள்.

இந்த கும்பலிடம், சாதாரண அப்பாவி மக்கள் மட்டும் அல்லாமல், ஐகோர்ட்டு நீதிபதி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பணத்தை இழந்துள்ளனர். இதுவரை இந்த கும்பலிடம் தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் பேர் வரை ஏமாந்து, கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதில் 400 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவில் வேலை பார்க்கும் 2 உதவி கமிஷனர்கள் கூட பணத்தை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில், சென்னை பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன்(வயது 42), பிரபல அரசியல் கட்சி பிரமுகர் செல்வா என்ற செல்வகுமார் மற்றும் வேளச்சேரியைச் சேர்ந்த குமரன் (44), ராயப்பேட்டையைச் சேர்ந்த மிதுன்ராயன் (41) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் செல்வகுமார்தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர். பென்ஸ் சரவணன் தனது கிளப் நஷ்டத்தில் செயல்பட்டதால், கிளப் செயல்பட்ட கட்டிடத்துக்கு ரூ.5 லட்சம் வாடகை கொடுக்க முடியாமல், இந்த மோடி கும்பலுக்கு தனது அலுவலகத்தை வாடகைக்கு விட்டு, மோசடி பணத்தில் இருந்து பங்கு வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த கும்பலைச் சேர்ந்த சலீம், ஜக்ரூதீன் ஆகிய இருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பென்ஸ், ஜாக்குவார், பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்களில்தான் வலம் வருவார்கள். அவர்களது சொகுசு கார்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பலைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் உள்பட மேலும் சிலரை கைது செய்ய தேடி வருகிறோம். இவர்கள் நடத்திய போலி கால் சென்டரில் மட்டும் 70 பேர் வேலை செய்துள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்துள்ளனர். இவர்களில் இளம்பெண்களை மோசடி கும்பலினர் தங்களது காம இச்சைக் கும் பயன்படுத்தி உள்ளனர்.

செல்போனில் பேசி, கடன் வாங்கி தருகிறோம், ஏ.டி.எம். கார்டை புதுப்பித்து தருகிறோம் என்று யாராவது பேசினால், அவர்களிடம் மோசம் போகாதீர்கள் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இந்த மோசடி தொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று மாலை சென்னை அண்ணாசாலை பகுதியில் செயல்பட்ட போலி கால்சென்டர் ஒன்றிலும் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *