Tamilசெய்திகள்

சென்னையில் பலத்த மழை – 2 வது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று இரவு சென்னையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம், திருவொற்றியூர், தாம்பரம், சேலையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

நேற்று காலை முதல் மாலை வரை வெப்பம் சுட்டெரிப்பதும், இரவில் மழை குளிர்விப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, நள்ளிரவில் சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

12 வருகை விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன. அதைப்போல், 14 புறப்பாடு விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன. கோழிக்கோடு மற்றும் டெல்லியில் இருந்து வந்த விமானங்கள் முறையே திருச்சி, பெங்களூருவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.