Tamilசெய்திகள்

சென்னையில் பனி மூட்டம் 2 நாட்களுக்கு நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகரில் அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது. 15 நிமிடங்கள் பயிற்சி செய்த பிறகும் உடல் வியர்க்காமல் இருக்கிறது. ஈரப்பதம் குறைவே இதற்கு காரணமாகும். அந்த அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது.

நுங்கம்பாக்கத்தில் நேற்று அதிகாலையில் 19.5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. இது இயல்பை விட இரண்டு டிகிரி குறைவாகும். இந்த நிலையில் குறைந்த ஈரப்பதம் மற்றும் இரவு வெப்ப நிலையுடன் கூடிய பனி மூட்டம் சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:- சென்னை நகரில் தற்போது அதிகாலையில் பனி மூட்டத்தை காண முடிகிறது. மேலும் 2 நாட்களுக்கு அதிகாலையில் இந்த பனி மூட்டம் நீடிக்கும். ஈரப்பதம் மற்றும் அதிகப்படியான ஈரப்பதத்தின் அளவுகோலான பனி புள்ளிக்கு கீழ் வெப்பநிலை குறையும் போது மூடுபனி உருவாகுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுத்த 48 மணிநேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால் சில பகுதியில் மூடுபனி பதிவாகும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 29 டிகிரி செல்சியஸ், 20 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.