தமிழ்நாடு நீச்சல் சங்கம் தேசிய நீச்சல் சம்மேளனத்தின் ஆதரவோடு 39-வது சப் ஜூனியர் மற்றும் 49-வது ஜூனியர் தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகளை நடத்துகிறது.
இந்த போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் மராட்டியம், கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஏறக்குறைய 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
டைவிங் போட்டியில் குரூப்-1 பிரிவு (16, 17, 18 வயது) குரூப் 2 பிரிவு (14, 15 வயது) குரூப் 3 பிரிவு (12, 13 வயது) சிறுவர், சிறுமியருக்கு போட்டிகள் நடைபெறுகிறது. வாட்டர் போலோ விளையாட்டுக்கு ஜூனியர் சிறுவர், சிறுமியருக்கு (2006-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள்) போட்டிகள் நடைபெறுகிறது.
ஜூனியர் தேசிய வாட்டர் போலோ போட்டியில் வெற்றி பெறும் சிறுவர் சிறுமியர் ஆசிய ஜூனியர் வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு நீச்சல் சங்க பொதுச் செயலாளர் டி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.