குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை, நிபுணர் குழுதான் முடிவு செய்தது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், அலங்கார ஊர்தி தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் நமது அலங்கார ஊர்தி இடம்பெறும்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும்.
சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற புகைபப்ட கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.