சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்தது
சென்னையில் கொரோனா பாதிப்பு ஏப்ரல், மே மாதங்களில் வேகமாக பரவியது.
கடந்த 12-ந்தேதி தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்து 855 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் 7,564 பேர் முடங்கினர். இதுவே சென்னையில் பதிவான தினசரி அதிகபட்ச பாதிப்பாகும்.
இதன் பிறகு கொரோனா தாக்கம் குறைய தொடங்கினாலும் வேகமாக வைரஸ் தொற்று சரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தான் குறைந்து வந்தது.
இதன்படி படிப்படியாக குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு அடுத்த ஒரு வாரத்தில் 6 ஆயிரமாக குறைந்தது. கடந்த 18-ந்தேதி 6,016 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் அதற்கு மறுநாள் இந்த எண்ணிக்கை சற்று கூடியது.
19-ந்தேதி அன்று 6,297 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு நோயின் தாக்கம் கணிசமாக குறைந்தது. 20-ந்தேதி அன்று சென்னையில் தினசரி பாதிப்பு 6,072 ஆக இருந்தது.
இது அதற்கு மறுநாள் மேலும் குறைந்து தினசரி பாதிப்பு 5,913 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக சென்னையில் தினசரி நோய் தொற்று தலைகீழாக சரிந்துள்ளது. கடந்த 22-ந்தேதியில் இருந்து தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்து வருகிறது.
23-ந்தேதி அன்று 5,169 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கு மறுநாள் (24-ந்தேதி) தினசரி நோய் தொற்று 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அன்று 4,985 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 2 நாட்களில் நோயின் தாக்கம் பெருமளவு குறைந்துள்ளது. 25-ந் தேதி அன்று 4,041 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (26-ந்தேதி) அந்த எண்ணிக்கை 3,561 ஆக சரிந்தது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் 33,361 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று 4,734 பேருக்கு கோவை மாவட்டத்தில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 2-வது நாளாக சென்னையை பின்னுக்கு தள்ளி கோவை முதலிடத்தில் இருக்கிறது.
கொரோனா பாதிப்பின் 2-வது அலை தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் வேகமாக பரவ தொடங்கியது. அப்போதுதான் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருந்தது.
தினமும் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 22-ந்தேதி அன்று சென்னையில் தினசரி நோய் தொற்று 3 ஆயிரத்தை நெருங்கி இருந்தது. அன்று 2,985 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதன் பின்னர் மின்னல் வேகத்தில் பரவிய வைரஸ் தொற்று தற்போதுதான் குறைந்துள்ளது. 77 நாட்களுக்கு பிறகு நேற்று சென்னையில் 3 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்க போலீசார் பல்வேறு நடிவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே கொரோனா தொற்று சென்னையில் குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இதுவரை 4 லட்சத்து 93 ஆயிரத்து 881 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 534 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் 43 ஆயிரத்து 624 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் நோய் தொற்று குறைந்த போதிலும் உயிரிழப்பு கட்டுக்குள் வராமல் உள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் 474 பேர் பலியாகி இருக்கும் நிலையில் சென்னையில் 79 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.