மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்காக 50,000 படுக்கைகள் கொண்ட மையங்கள் தயார் நிலையில் உள்ளன என தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் பேசியதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்புக்காக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 1-7-2020 வரை 60, 533 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ராயபுரம், வியாசர்பாடி, விருகம்பாக்கம், மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள் கொரோனா வைரஸ் தடுப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் ஆணைக்கிணங்க வைரஸ் கட்டுப்பாடு மையங்கள் மறு வரையறை செய்யப்பட்டுள்ளன. அதன்படி தற்போது 124 கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் கொரோனா வைரஸ் தோற்று பாதித்த நபர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களை தனிமை படுத்துவதற்கு 50 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தற்பொழுது வரை இந்த தனிமைப்படுத்தும் மையங்களில் சுமார் 10,000 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1979 குடிசைப் பகுதிகளில் வாழும் சுமார் 30 லட்சம் மக்களுக்கு 98 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு பயன்பாட்டுடன் கூடிய துணியாலான முகக் கவசங்கள் ஒரு நபருக்கு இரண்டு வீதம் இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 1.5 கோடி துணியாலான முகக் கவசங்கள் வாங்கப்பட்டுள்ளன. கபசுர குடிநீர் அம்மா உணவகங்களில் தினமும் தயார்செய்து அளிக்கப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு இதுநாள்வரை 9,31,863 கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் 85 ஆயிரம் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. தூய்மை பணியாளர்களுக்கு இதுவரை 4.35 லட்சம் முகக் கவசங்கள், 2.86 லட்சம் கையுறைகள், 6,180 ஒளிரும் கவச உடைகள், அவ்வப்போது கைகழுவ தேவையான சோப்பு கரைசல் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற முடியாதவர்கள் மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 51 கோவிட் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அம்பத்தூர் மண்டலம் அத்திப்பட்டு பகுதியில் 5 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய covid-19 பாதுகாப்பு மையம் தயார் செய்யப்பட்டு வருகிறது. என அவர் தெரிவித்துள்ளார்.