தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னையில் 49 ஆயிரத்து 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 730 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.