சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தின் ஒரு பகுதியில் ஓட்டல் செயல்படுகிறது. இந்த ஓட்டலுக்கு நேற்று இரவு வந்த ஒரு கும்பல், திடீரென கற்களை வீசியும் உருட்டுக்கட்டையால் தாக்கியும் கண்ணாடியை உடைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலையில் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கேரள சுற்றுலா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள விருந்தினர் இல்லம் கல்வீசி தாக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் ஆயிரம் விளக்கு பகுதி இந்து முன்னணி தலைவர் பார்த்தசாரதி என்பது தெரிய வந்துள்ளது.