Tamilசெய்திகள்

சென்னையில் கூட்டநெரிசல் நேரங்களில் மின்சார ரெயில் சேவை அதிகரிக்க திட்டம்

சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கிறார்கள். தற்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான நெரிசல் காணப்படுகிறது. எனவே பயணிகளின் நெரிசலை குறைக்க ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக ரெயில்களை இயக்க வேண்டும். மற்ற நேரங்களிலும் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள புறநகர் பகுதிகள் தற்போது வளர்ச்சி அடைந்து வருகின்றன. இங்கு தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் பெருகி விட்டன. தாம்பரம்-செங்கல்பட்டு இடையே புதிய ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்ததும் ரெயில்களின் சேவை அதிகரிக்கப்பட வில்லை. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும்.

அதேபோல் சென்னை-திருவள்ளூர் இடையே காலை நேரத்தில் 20 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். இந்த வழித்தடத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்க வேண்டும். கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்த சென்ட்ரல்-திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி நள்ளிரவு ரெயில் சேவையையும் மீண்டும் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து சென்னை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் நெரிசலான நேரங்களில் மின்சார ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி பயணிகளிடம் இருந்து மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்களை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எனவே கூட்ட நெரிசல் உள்ள வழித் தடங்களில் கூடுதலாக 10 மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்டு மாத இறுதியில் வெளியாக உள்ள புதிய கால அட்டவணையில் இடம்பெறும். அதன்மூலம் பயணிகளின் நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.