Tamilசெய்திகள்

சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் நாளை (10-ந்தேதி) முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியார் பஸ்களில் நின்று பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் அரசு மற்றும் தனியார் பஸ்களில் நின்று பயணம் செய்வதற்கு கண்டக்டர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

தமிழகத்தில் 22 ஆயிரம் அரசு பஸ்கள் இருந்த போதிலும் கொரோனா பாதிப்பின் காரணமாக 15 ஆயிரம் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கூட்டம் குறைவாக இருப்பதால் பஸ்களும் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.

சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் 4 ஆயிரம் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசின் புதிய உத்தரவால் பயணிகள் இனி பஸ்களில் கூட்டமாக நின்று பயணம் செய்ய முடியாது.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு 2 ஆயிரத்து 500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு முந்தைய அளவு பயணிகள் எண்ணிக்கை இன்னும் உயரவில்லை.

கொரோனாவுக்கு முன் 34 லட்சம் பேர் பயணம் செய்தார்கள். கொரோனா காலத்தில் அது 21 லட்சமாக குறைந்தது. பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டதால் இந்த எண்ணிக்கை 19 லட்சமாக மேலும் குறைந்தது.

இந்த நிலையில் நாளை முதல் பஸ்களில் நின்று பயணம் செய்வதற்கு அனுமதி இல்லை. அரசின் உத்தரவை பின்பற்றி அனைத்து டிரைவர், கண்டக்டர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் மக்கள் பஸ்களில் கூட்டமாக ஏறுவதை கண்டக்டர்களால் கட்டுப்படுத்துவது சிரமம். இதனால் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அதிக பயணிகளை பஸ்சில் ஏற்ற மறுக்கும் போது தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறு சிறு பிரச்சனைகளை கண்டக்டர்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

அதனால் சென்னையில் அதிக கூட்டம் நெரிசல் மிகுந்த வழித்தடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் கூடுதலாக மாநகர பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். நாளை முதல் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கப்படும்.

எந்தெந்த வழித்தடங்களில் மக்கள் அதிகம் பயணம் செய்கிறார்கள் என்பதின் அடிப்படையில் அந்த வழித்தடத்தில் பஸ்கள் அதிகமாக இயக்கப்படும். குறிப்பாக காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அந்த நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படும். டிரைவர், கண்டக்டர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது குறித்து இன்று கணக்கெடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நாளை முதல் அந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதே போல நீண்ட தூரம் செல்லக் கூடிய அரசு விரைவு பஸ்களிலும் இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. விரைவு பஸ்களில் பொதுவாக மக்கள் நின்று பயணம் செய்வதில்லை. போதிய இடைவெளியுடன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வதால் இந்த பிரச்சனை விரைவு பஸ் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.