Tamilசெய்திகள்

சென்னையில் கார் மோதியதில் இளைஞர் பலி – கார் ஓட்டிய எம்.பி மகளுக்கு ஜாமின்

சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 22) பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பெசன்ட் நகர் கலாசேத்ரா கலாசேத்ரா காலனி, வரதராஜ் சாலை நடைபாதை அருகே தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று, சாலை ஓரம் தூங்கிய சூர்யா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் சூர்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய காரில் 2 பெண்கள் இருந்துள்ளனர். விபத்து குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பி ஓடினர்.

மேலும் காரில் வந்த இரு பெண்களும் மதுபோதையில் இருந்ததாக சூர்யாவின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஸ் தலைமையிலான போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கார் பதிவெண் மற்றும் தப்பியோடிய பெண்களின் புகைப்படம் ஆகிய ஆதாரங்களை வைத்து விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர மாநில எம்பி பீடா மஸ்தானின் மகள் பீடா மாதூரி என்பது தெரியவந்தது. இவர் புதுச்சேரியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் போலீசார் நேற்று மாலை பீடா மாதூரியை கைது செய்தனர். அவர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பீடா மாதூரி போலீஸ் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

நடைபாதையில் தூங்கிய பெயிண்டர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பெசன்ட் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.