X

சென்னையில் காய்ச்சல் முகாம்கள் அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நேற்று ஒரேநாளில் ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 100 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் 6 ஆயிரத்து 860 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 1,798 பேர் காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தனர். அவர்களுக்கு பாரசிடமால் மாத்திரை வழங்கப்பட்டது.

காய்ச்சல் தாக்கம் அதிகரித்து இருப்பதால் சென்னையில் இன்று கூடுதலான மருத்துவ முகாம்கள் நடத்த மாநகராட்சி ஏற்பாடுகள் செய்துள்ளது. எல்லா முகாம்களிலும் டாக்டர்கள், செவிலியர்கள் இருப்பார்கள். பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது உறுதியானால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்வார்கள். இந்த சாதாரண காய்ச்சலுக்கும் எச்-1 என்-1, கொரோனாவுக்கான அறிகுறிகளே காணப்படுகிறது.

எனவே தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளும்படி மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. வரும் நாட்களில் இந்த முகாம்கள் ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.