சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களிலும் சராசரி மழை அளவை விட கூடுதலாக பெய்துள்ளது.

சென்னையில் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 372.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 321.2 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இயல்பைவிட கூடுதலாக 16 சதவீதம் மழை பெய்துள்ளது.

சென்னையில் இந்த வாரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், 1-ந் தேதி கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழையும், 2, 3-ந் தேதிகளில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் வானிலை விஞ்ஞானிகள் கூறும்போது, ‘செப்டம்பர் மாதத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools