சென்னையில் இருந்து இன்று 651 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறதுo90
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக செல்லும் ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து விட்டன. இதையடுத்து பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் பஸ்களையே நம்பி உள்ளனர்.
இதையடுத்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்காக நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊர் செல்லத் தொடங்கியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் அரசு பஸ்கள் மூலம் சொந்த ஊர் சென்றுள்ளனர். மேலும் இன்று முதல் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 அரசு விரைவு பஸ்களுடன், 651 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இன்று மட்டும் 2751 பஸ்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.
நாளை (13-ந்தேதி) வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன், 1855 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 3955 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வருகிற 14-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன், 1943 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4043 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 3 நாட்களிலும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பஸ்களுடன் 4449 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 10749 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் பஸ்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பருப்பு மண்டி, அண்ணாநகர் பணிமனை ஆகிய இடங்களில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு பஸ்களில் சென்னையில் இருந்து இன்று செல்ல 14,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை பயணம் செய்ய இந்த சிறப்பு பஸ்களில் 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் 12 முன்பதிவு மையங்கள் வருகிற 14-ந்தேதி வரை செயல்படும்.
பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள 9445014450, 9445014436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1800 425 6151, 044-2474 9002, 26280445, 26281611 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் கட்டுப்பாட்டு மையமும், முக்கிய பஸ் நிலையங்களில் 20 தகவல் மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இன்று முதல் 340 சிறப்பு இணைப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. வருகிற 14-ந்தேதி வரை இணைப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து ரெயில்கள், அரசு விரைவு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள் மூலம் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.