Tamilசெய்திகள்

சென்னையில் அடுத்த 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது.

தெற்கு வங்கக்கடல் மத்தியில் இருந்து வந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் 29 முதல் 31-ந் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் இருந்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னையில் அதிக மழையை எதிர்பார்க்கலாம் என்று தனியார் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் கனமழையை எதிர்பார்க்கலாம். 30-ந் தேதி தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.