Tamilசெய்திகள்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை

வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி தமிழகத்தில் தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த தாழ்வுப்பகுதி அதற்கு அடுத்தநாள் (நேற்று முன்தினம்) தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதே நாள் இரவில் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாகவே நல்ல மழை பெய்தது.  குறிப்பாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. காற்றழுத்த தாழ்வு மண்டலம்  நேற்று மாலை கரையைக் கடந்தது. இதன்பிறகு சென்னையில் மழை குறையத்தொடங்கியது. இன்று நண்பகலில்  வெயில் அடிக்கவும் தொடங்கியது.  இதனால், பிரதான சாலைகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்த நிலையில், தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 15- ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.