Tamilசெய்திகள்

சென்னையின் முக்கியமான 7 சாலைகளை விரிவாக்கம் செய்ய பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு

சென்னை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக மேம்பாலம், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சென்னையில் உள்ள 7 முக்கிய சாலைகளை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

அதாவது அண்ணா சாலை-மத்திய கைலாஷ் இடையேயான 3 கிலோ மீட்டர் தூரமுள்ள சர்தார் படேல் சாலை, பாந்தியன் சாலை-கூவம் இடையேயான 0.72 மீட்டர் தூரமுள்ள எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை-அண்ணாநகர் முதலாவது பிரதான சாலை வரை 1.4 கிலோ மீட்டர் தூரமுள்ள கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை-வள்ளுவர் கோட்டம் சாலை வரை 1.1 கிலோ மீட்டர் தூரமுள்ள டேங்க் பண்ட் சாலை, அண்ணா சாலை-பாந்தியன் சாலை வரை 1.3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரீம்ஸ் சாலை, 1.3 கிலோ மீட்டர் தூரமுள்ள நியூ ஆவடி சாலை, 1.5 கிலோ மீட்டர் தூரமுள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய 7 சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.

சர்தார் படேல் சாலையைப் பொறுத்தவரை தற்போது 20 மீட்டர் (65 அடி) அகலத்தில் உள்ளது. இது, 30.5 மீட்டர் (100 அடி) அகலப்படுத்தப்படுகிறது. அதேபோன்று எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டேங்க் பண்ட் சாலை, கிரீம்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை ஆகியவை 18 மீட்டர் (59 அடி) வரை அகலமாகின்றன. பெரம்பூர் பேரக்ஸ் சாலையை 24 மீட்டர் (78 அடி) வரை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை வளர்ச்சிக்குழும அதிகாரி கூறியதாவது:- போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சாலைகளை இணைக்கும் வகையிலும் இந்த சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சாலை விரிவாக்கம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்ய ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்துக்கு தேவையான இடங்கள், கட்டிடங்களை கையகப்படுத்துவது, கையகப்படுத்தப்படும் கட்டிடங்களை இடிப்பது, அந்த இடங்கள், கட்டிடங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்மானிப்பது, விரிவாக்கம் செய்யப்பட உள்ள பகுதியில் இருக்கும் மரங்களை அகற்றுவது போன்ற சாலை விரிவாக்கத்தை மேற்கொள்ள சாத்தியமான மேம்பாடுகளை அடையாளம் காணும் பணிகளை இந்தக் குழு ஆய்வு செய்யும்.

இந்த ஆய்வறிக்கையை ஆலோசனைக் குழு ஒரு மாதத்தில் அளிக்கும். அதன்பின்பு சாலை விரிவாக்கத்துக்கு தேவையான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்கப் பணிகள் தொடங்கும். தற்போது இருந்துவரும் பாதசாரிகளின் நடைமேடையைத் தவிர்த்து புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அகலத்தில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்படும். இதேபோன்று சென்னையையொட்டி உள்ள வெளிவட்டச் சாலைகளுடன் அந்த சாலைகளையொட்டி உள்ள கிராமச் சாலைகளை இணைக்கும் திட்டம் உள்ளது. முதல்கட்டமாக சீமாபுரம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்கள் வெளிவட்டச் சாலையுடன் இணைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.