சென்னைக்கு வரும் கிருஷ்ணா நதி நீர்
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துவிட்டு தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நதிநீரை பெறுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் நானும், அமைச்சர் ஜெயக்குமாரும் ஆந்திர முதல்-மந்திரியை சந்திக்க சென்றோம். அவரிடம், தமிழக முதல்-அமைச்சர் அளித்த கடிதத்தை கொடுத்தோம்.
தமிழகத்துக்கு தரவேண்டிய கிருஷ்ணா நீரை வழங்க ஆந்திர முதல்-மந்திரி ஒப்புக்கொண்டார். உடனடியாக தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதன் மூலமாக சென்னையில் உள்ள குடிநீர் பற்றாக்குறை வேகமாக தீர்ந்துவிடும்.
ஏற்கனவே 4 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். தற்போது 4 டி.எம்.சி. வழங்க வேண்டும். மொத்தம் 8 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட்டால் நல்லதுதான். சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் திறந்துவிடப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.