சென்னைக்கு வந்த 18 பேருக்கு கொரோனா பாதிப்பு

வெளிநாடுகளில் பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதுவரையில் 18 பேருக்கு கொரோனா இருப்பத உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், சுவீடன், இங்கிலாந்து உள்ளிட்ட இடர்பாடு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்த 9,819 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல இடர்பாடு இல்லாத நாடுகளில் இருந்து வந்த 43 ஆயிரத்து 938 பயணிகளில் 2 சதவீத உத்தேச கொரோனா பரிசோதனை 1,303 பேருக்கு செய்ததில் அமெரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கும், அபுதாபி, நைஜீரியா, இலங்கையில் இருந்து வந்த தலா ஒரு பயணிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்கூறியதாவது:-

ஒமைக்ரான் உருமாறிய கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாதிரிகள் பெங்களுரு ஆய்வகத்திற்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் மாநில பொது சுகாதார ஆய்வகத்திலும் சென்னை மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பயணிகளுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை 8 மணி வரையில் அதிக இடர்பாடுகள் உள்ள நாடுகளில் இருந்து வந்த 8,563 பயணிகள் 7 நாட்களுக்கு அவரவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 8-வது நாளில் 1,256 பேருக்கு கொரோனா தொற்று மறுபரிசோதனை செய்ததில் 458 பேருக்கு தொற்று கண்டறியப்படாததால் வீட்டு தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 796 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் எதிர்பார்க்கப்படுறது.

அதிக இடர்பாடுகள் இல்லாத நாடுகளில் இருந்து வந்த 43 ஆயிரத்து 933 பயணிகள் அவரவர்கள் உடல் நிலைமையை 14 நாட்களுக்கு சுயமாக கண்காணித்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 14 நாட்களுக்குள் எவருக்கேனும் காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனைகள் பெற்று சிகிச்சை பெற வேண்டும்.

மாநில இலவச அவசர மருத்துவ உதவி எண் 104-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 18 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. 14 பேர் அரசு மருத்துவமனையிலும் 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகிறார்கள்.

இதுவரையில் பெறப்பட்ட மரபணு சோதனையில் ஒருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools