X

சென்னைக்கு வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் நேற்றிலிருந்து வரும் 24-ந் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது.

உள்நாட்டு விமான பயணிகள் அவசர வேலைகளுக்காக பயணிக்கலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் பயணிகள் பலர் கொரோனா காலத்தில் விமானங்களில் பயணிக்க விரும்பவில்லை.

இதனால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இன்று உள்நாட்டு விமான சேவைகள் குறைந்துள்ளது.

சென்னையிலிருந்து இன்று 38 புறப்பாடு உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதில் 2,400 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். அதைப்போல் சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்கள் 40 இயக்கப்பட்டு, அதில் 1,300 பேர் மட்டும் பயணிக்கின்றனர். இன்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மொத்தம் 78 விமானங்களில் 3,700 மட்டுமே பயணிக்கின்றனர்.

இன்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 126 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதில் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்லும் விமானங்கள் 62, சென்னைக்கு வரும் விமானங்கள் 64.

இதுதவிர சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று 2 வந்தே பாரத் விமானங்கள், 6 சிறப்பு விமானங்கள் மொத்தம் 8 விமானங்கள் மட்டுமே வருகின்றன.

அதிலும் அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து டில்லி வழியாக சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் 8 பயணிகள் மட்டுமே வந்ததாக தெரிகிறது.