X

சென்னைக்கு திரும்பும் மக்களுக்காக 300 சிறப்பு மாநகர் பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று முதல் சென்னை திரும்பி கொண்டு இருக்கிறார்கள். அரசு பஸ்கள், ரெயில்களில் வரும் மக்கள் வீடுகளுக்கு எளிதாக செல்ல வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் அதிகாலை முதல் இயக்கப்படுகிறது.

நேற்று பகல் நேரத்திலும் வெளியூர்களில் இருந்து மக்கள் சென்னை திரும்பிய வண்ணம் இருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுவதால் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய முக்கிய பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

தென் மாவட்டங்களில் இருந்து ரெயில்களில் வரும் மக்கள், தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இறங்கி வீடுகளுக்கு செல்ல ஆட்டோக்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்த அளவிலான தூரத்திற்கு ரூ.200-ம் கோயம்பேடு-சென்ட்ரலுக்கு ரூ.300-ம் வசூலிக்கின்றனர்.

இதே போல பெருங்களத்தூரிலும் ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் வசதிக்காக கூடுதலாக 300 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம், பெருங்களத்தூர், கோயம்பேடு பஸ் நிலையங்களுக்கு மட்டும் 100 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் 120 பஸ்கள் வெளியூர்களில் இருந்து வரும் கூட்டத்தை சமாளிக்க அதிகாலையில் இருந்து முக்கிய பஸ் நிலையங்கள்-ரெயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியதாவது:- தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்பி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு செல்ல வசதியாக மாநகர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இரவு நேர சேவைக்கு 85 பஸ்கள் பயணிகள் கூட்டம் குறையும் வரை இயக்கப்படுகிறது.

இதுதவிர தீபாவளிக்கு பஸ் தேவை அதிகரித்ததால் விழுப்புரம், கும்பகோணம், திருச்சி ஆகிய நகரங்களுக்கு 170 மாநகர பஸ்கள் கூட்ட நெரிசலை குறைக்க இயக்கப்பட்டன. இந்த வாரம் முழுவதும் வெளியூர்களில் இருந்து பயணிகள் வருவதால் மாநகர பஸ்கள் தேவையான அளவிற்கு இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.