சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் உயர்வு!
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பூண்டி ஏரி அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பருவமழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்படும் தண்ணீர் மூலம் ஏரியின் நீர்மட்டம் உயருகிறது.
கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் மூலம் பூண்டி ஏரிக்கு பெறப்படும் தண்ணீர் கடந்த வாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டு தேவைக்கு பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பருவமழை கடந்த சில நாட்களாக நன்றாக பெய்தது. அதற்கு பிறகு ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான அளவு பெய்யாததால் ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை. மாறாக குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வந்ததால் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டமும் சற்று உயர்ந்து உள்ளது. இதனால் விவசாய விளைநிலங்களில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் சற்று உயர்ந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பூண்டிக்கு கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதில் இருந்து ஏரிகளின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. நேற்றுமுன்தினம் பூண்டி ஏரியில் 967 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரத்தில் 99, புழல் 1,528 மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் 651 மில்லியன் கன அடி உள்பட 3 ஆயிரத்து 245 மில்லியன் கனஅடி (3.245 டி.எம்.சி.) தண்ணீர் இருந்தது.
குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 470 கனஅடியும், சோழவரத்தில் இருந்து 23 கனஅடி, புழலில் 81 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரிக்கு 135 கனஅடியும், புழல் ஏரிக்கு 390 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 237 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 1 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்தது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நீர்பிடிப்பு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக பூண்டியில் 5 மில்லி மீட்டர், சோழவரத்தில் 4 மி.மீ., புழலில் 7 மி.மீ., செம்பரம்பாக்கத்தில் 38 மி.மீ., ஊத்துக்கோட்டை அருகில் உள்ள கிருஷ்ணா நதிநீர் வரும் நுழைவு பகுதியில் 13 மி.மீ., கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 17 மி.மீ., தாமரைப்பாக்கம் ஏரியில் 5 மி.மீ. என்ற அளவில் மழை பெய்தது.
இதனால் பூண்டி ஏரிக்கு 213 கனஅடியும், புழல் ஏரிக்கு 410 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 29 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இதன் மூலம் 4 ஏரிகளையும் சேர்த்து நீர்மட்டம் 3 ஆயிரத்து 246 மில்லியன் கனஅடியாக உயர்ந்தது. 27-ந்தேதியை விட 1 மில்லியன் கனஅடி (10 லட்சம் கனஅடி) நீர் ஒருநாள் இரவில் பெய்த மழை மூலம் நீர் பெறப்பட்டதில் ஏரிகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்து உள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்துக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.