தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று தனது சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 கோடியே 21 லட்சத்தில் முடிந்த திட்டப்பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், முடிந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும், அ.தி.மு.க. கொடியேற்றி வைத்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் உள்ள தி.மு.க. அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல் செய்வதிலேயே கவனம் செலுத்துவதால், மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வது இல்லை. அதற்கு உதாரணமாகத்தான், நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியானது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, பல்வேறு வகைகளில் அதிகமான தொகையை ஊழல் செய்து முதல்-அமைச்சரின் குடும்பத்திற்கு வழங்கிய காரணத்தினாலேயே அவரை முதல்- அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் உடன் இருந்து கவனித்து கொள்கிறார்கள். மூத்த அமைச்சரான துரைமுருகன் ஆஸ்பத்திரியில் இருந்த போது கூட போய் பார்க்காத முதல்- அமைச்சர், செந்தில்பாலாஜியை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்க்க என்ன காரணம்.
செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் அல்ல, மற்ற அமைச்சர்களின் பதவிக்கும் ஆபத்தாகி விடும். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குடிமராமத்து பணிகள், காவிரி உபரிநீர் பாசன திட்டம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிஉள்ளது. இதுதான், 2 ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனையாக உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், அவர்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை சம்பவங்கள், போதை பொருட்கள் நடமாட்டம், போலி மது விற்பனை அதிகரித்து வருகிறது. இதை வைத்து பார்த்தால், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துவிட்டது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.