தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாததால் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு கொள்கை முடிவு தொடர்பான விஷயங்களில் உடனடியாக கவர்னர் அனுமதி கொடுப்பது கிடையாது. இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான 5 மணி நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்க சொல்லி உள்ளதால் அதுவரை டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் தெரிவித்து இருந்தார்.
அந்த சமயத்தில் அட்டர்னி ஜெனரல் விடுமுறையில் இருந்ததால் அவரது கருத்தை உடனடியாக கவர்னரால் பெற முடியவில்லை. இப்போது அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி டெல்லி வந்து விட்டார். இதனால் அவரை நேரில் சந்தித்து கருத்து கேட்க கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று மாலை 5 மணி அளவில் கவர்னர் டெல்லி செல்கிறார்.
அங்கு உள்துறை மந்திரி அமித்ஷா, சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி ஆகியோரை ஆர்.என்.ரவி சந்தித்து பேச உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு உண்டா? இல்லையா? கவர்னரின் அதிகார வரம்பு என்ன? என்பது குறித்து அப்போது சட்ட நிபுணர்களின் கருத்து கேட்கிறார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரமுகர்களை சந்திக்க வேண்டி உள்ளதால் கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாட்கள் டெல்லியில் தங்கி இருப்பார். வருகிற 13-ந்தேதி தான் அவர் சென்னை திரும்புகிறார். எனவே செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பாரா? இல்லையா? என்பதை கவர்னர் 14-ந்தேதி தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.