X

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் ஜனவரி 22-ந்தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை தொடங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்றபோது செந்தில் பாலாஜி சார்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட் சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும். அதனால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்காத நீதிபதி மனுவை தள்ளுபடி செய்ததுடன், இன்று (வெள்ளிக்கிழமை) குற்றச்சாட்டு பதிவு செய்ய செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சந்திரமோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் பிரபாகரன் ஆஜராகி முறையிட்டார்.

மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கமான முறைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்.

இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பில் வாதாட விசாரணை திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் ஆஜராகி ஜாமீன் மனு புதன்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும். திங்கட்கிழமை தன்னால் ஆஜராக இயலாது என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags: tamil news