சூலூரில் திண்ணையில் அமர்ந்து பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின்
கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். அவருக்கு மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
இன்று காலை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பட்டணம்புதூர் பகுதியில் பொதுமக்களிடம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமானோர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து கொண்டனர். நீர் மோர் வழங்கினர். பட்டணம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானத்தில் மரத்தடியில் அமர்ந்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடந்தால் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறிவிடும். எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் உங்களை தேடி வர வேண்டும். நீங்கள் அவர்களை தேடி போக வேண்டிய தேவையில்லை. அப்போது பட்டணத்தை சேர்ந்த குணசேகர் என்பவர் மு.க. ஸ்டாலினிடம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு மட்டும் அதிக திட்டங்கள் கொடுப்பதாக கூறி உள்ளீர்களே என்று கேட்டார். அதற்கு மு.க.ஸ்டாலின், பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதனால் தான் என பதில் அளித்தார். பின்னர் ஸ்டாலின் அந்த பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு கண்மணி, அன்பழகன் என பெயர் சூட்டினார்.
தொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றார். பொதுமக்களிடம் ஸ்டாலின் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததற்கு காரணம் இந்த ஆட்சி தான் என்றார்.
இன்று மாலை 5 மணி முதல் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாப்பம்பட்டி ஊராட்சியில் பிரசாரம் செய்கிறார். பின்னர் செலக்கரைச்சல் ஊராட்சி, வாரப்பட்டி ஊராட்சி, சுல்தான் பேட்டை, குமாரபாளையம் ஊராட்சி, செஞ்சேரிமலை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி, ஜல்லிப்பட்டி ஊராட்சி ஆகியபகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.