X

சூர்யா கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர் பாரதிராஜா

தமிழ் சினிமாவில் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிதாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக டி.சிவா, துணைத் தலைவர்களாக தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.ஆர்பிரபு, பொருளாளராக தியாகராஜன், இணைச் செயலாளர்களாக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலக திறப்பு விழாவில் பாரதிராஜா, தனஞ்ஜெயன், டி.சிவா, சுரேஷ் காமாட்சி, நந்தகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அலுவலகம் திறக்கப்பட்ட பின்னர் பாரதி ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது: தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கவே புதிதாக சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் தயாரிப்பாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வலுவானவர்கள் எல்லோரும் இணைந்துள்ளோம்.

திரையரங்க உரிமையாளர்கள் அவர்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். எங்கள் துணைத்தலைவர் எஸ்.ஆர்.பிரபு இதுகுறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதற்கு இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. பதில் அளித்த பின்னர் சங்கத்தில் ஆலோசித்து எங்கள் முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாரதிராஜா, நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் எனவும் அவருடைய கருத்துக்கு முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் கூறினார்.