தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் இன்று மதியம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்ட போது அந்த இடத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை சூர்யா கடந்த 6 மாதத்திற்கு முன்பாகவே காலி செய்து விட்டு அடையாறுக்கு மாற்றி விட்டார் என தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் போலியானது எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.