தீபாவளிக்கு மறுநாளான வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மாலை 5.10 மணிக்கு தொடங்கி 6.30 வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது. இதனை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கிரகணம் நிகழும் நாளன்று கோவில்களில் நடை அடைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலம் என்பதால் சூரிய கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம் போல் திறந்து இருக்கும். பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணத்தின் போது கிரகணம் முடியும் போதும், சூரிய கிரகணத்தின் போது கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற 25-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கிரகணம் தொடங்கும் போது கோவில் வளாகத்தில் 4-ம் பிரகாரத்தில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.