X

சூரியகுமார் யாதவ் முற்றிலும் தனித்துவமானவர் – பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் 61 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

போட்டி நிறைவுக்கு பின்னர் மெல்போர்னில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது குறித்து கூறியதாவது:

அவர் (சூரியகுமார்) முற்றிலும் தனித்துவமானவர் என்றே நான் நினைக்கிறேன். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார். நல்ல ஃபார்மில் இருக்கும்போது அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு முறையும், சந்தேகத்திற்கு இடமின்றி அவர் விளையாடுவது, புதிதாக ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இருக்கிறது.

25 பந்துகளில் 61 ரன்கள் விளாசியது நம்ப முடியாதது. அதனால்தான் அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கிறார். 225 ரன்களுடன், இந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீராக அவர் திகழ்கிறார். விராட் கோலி (246) மட்டுமே அவரை விட அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார். தனது உடலை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார், உடற் பயிற்சிக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதைப் பார்க்கும்போது, நிறைய கடின உழைப்புக்கு அவர் வெகுமதியைப் பெறுகிறார் என்றே நான் நினைக்கிறேன். நீண்ட காலம் இது தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.