Tamilசினிமா

சூப்பர் ஸ்டார்கள் விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ‘லால் சலாம்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் நவம்பர் 14-ஆம் தேதி தனது சமூக வலைதளத்தில் கமல் மற்றும் அமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘Superstars are superstars for a reason’ என்றும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த புகைப்படத்தில் ஏற்கெனவே இருந்த பதிவை மாற்றி ‘stars are stars for a reason’ என்று குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. அதுமட்டுமல்லாமல் பலரும் முதலில் சூப்பர் ஸ்டார்ஸ் என்று குறிப்பிட்டுவிட்டு பின்னர் ஏன் மாற்றவேண்டும்? என்று விஷ்ணு விஷாலை விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், விஷ்ணு விஷால் இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், “சூப்பர் ஸ்டார்கள் சூப்பர் ஸ்டார்கள் தான். அந்தப் பதிவை நான் எடிட் செய்துவிட்டேன் என்பதற்காக நான் பலவீனமானவன் அல்ல. சூப்பர் ஸ்டாராக இருக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன். எனவே என்னுடைய டைம்லைனில் நெகட்டிவிட்டியை பரப்புவோர் இங்கிருந்து கிளம்புங்கள். நமக்கென்று ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் பட்டம் மட்டுமே உள்ளது. ஆனால் என்னுடைய மதிப்புக்கு அப்பாற்பட்டு, சாதித்த அனைவருமே சூப்பர் ஸ்டார்கள்தான். அனைவரையும் நேசியுங்கள். அன்பைப் பரப்புங்கள். வெறுப்பை அல்ல” என்று கூறியுள்ளார்.