உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் இருந்து மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பினர். ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஒவ்வொரு நாடும் சூடானில் வசித்து வரும் தங்கள் நாட்டினரை திரும்ப அழைத்து வருகிறார்கள்.
அதுபோல், சூடானில் வசித்து வரும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக, ‘ஆபரேஷன் காவேரி’ என்ற மீட்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
சூடானில் சண்டை நடந்து வரும் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள், பஸ்கள் மூலமாக போர்ட் சூடான் நகருக்கு வரவழைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து விமானம் அல்லது கப்பல்கள் மூலமாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுகிறார்கள்.
நேற்று முன்தினம் தனி விமானத்தில் 231 இந்தியர்கள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும், 328 பேர் டெல்லிக்கும் வந்து சேர்ந்தனர். இந்நிலையில், நேற்று மேலும் 231 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். மும்பைக்கு வர்த்தக விமானத்தில் வந்து சேர்ந்தனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார். இதுவரை 2 ஆயிரத்து 930 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.