சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பணம் போட்டு வைத்துள்ளனர். இதுதொடர்பான வருடாந்திர புள்ளிவிவரத்தை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் ஆகியவை போட்டு வைத்திருந்த பணம், கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சுமார் 6 சதவீதம் குறைந்து, ரூ.6 ஆயிரத்து 625 கோடி ஆக இருந்தது. இந்தியாவில் உள்ள கிளைகள் மூலம் அனுப்பப்பட்ட பணமும் இதில் அடங்கும்.
இதன்மூலம், தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியர்களின் பணம் குறைந்துள்ளது. இது, கடந்த 30 ஆண்டுகளில் 3-வது மிகக்குறைவான தொகை ஆகும். சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்தை கருப்பு பணமாக கருத முடியாது என்பதே சுவிட்சர்லாந்து நாட்டின் நிலைப்பாடு ஆகும்.
இருப்பினும், இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இந்தியர்களின் கணக்கு விவரத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியாவுக்கு அளிக்க தொடங்கியது. ஆண்டுதோறும் இந்த விவரங்களை அளிக்க உள்ளது.