சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில், மகளிருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார்.
நடப்பு உலக சாம்பியனான பி.வி.சிந்து, துவக்கம் முதலே கரோலினாவின் தாக்குதல் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். முதல் செட்டை 12-21 என பறிகொடுத்த சிந்து, இரண்டாவது செட் ஆட்டத்தில் மேலும் பின்தங்கினார். 5-21 என அந்த செட்டையும் இழக்க, பி.வி.சிந்துவின் கனவு தகர்ந்தது. 35 நிமிடங்களில் சிந்துவை வீழ்த்திய கரோலினா சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார்.
2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு முதல் முறையாக இந்த போட்டியில் தான் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். கரோலினாவிடம் சிந்து தொடர்ச்சியாக மூன்று முறை தோல்வி அடைந்துள்ளார். இருவரும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர்.