X

சுவிட்சர்லாந்தில் ஏலம் விடப்பட்ட டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு – ரூ.50 கோடி விற்பனை

சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்தில் ஏலம் விடப்பட்டது. டிரினிட்டி என்று அழைக்கப்படும் இந்த டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு நேற்று முன்தினம் (ஏப்ரல் 18ம் தேதி) சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் ஏலம் விடப்பட்டது.

ஐரோப்பாவில் இதுபோன்ற டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல் முறை என்றும், இது நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவம் என்றும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள 3 புதைபடிம ஆய்வு தளங்களில் இருந்து டிரனாசோரஸ் ரெக்ஸ் (டி-ரெக்ஸ்) என்ற வகையைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 300 எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவை மொத்தமாக ஒரே எலும்புக்கூடாக சேர்க்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.

டிரினிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள எலும்புக்கூடு மொத்தம் 11.6 மீட்டர் நீலமும், 3.9 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இந்த எலும்புக்கூடு 6.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 கோடி) ஏலம் போனது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் இதனை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.