X

சுரேஷ் ரெய்னாவின் 13 வருட சாதனையை முறியடித்த வாஷிங்டன் சுந்தர்

நியூசிலாந்து – இந்தியா மோதிய முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 306 ரன்களை குவித்தது.

இந்திய அணியின் தொடக்க ஜோடியான தவான்- சுப்மன் கில் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்த்தனர். இதன் பின்னர் வந்த பண்ட் (15), சூர்யகுமார் யாதவ் (4) என சொதப்பியதால் மிடில் ஓவரில் தடுமாறியது. அப்போது நிதானமாக ஆடும் சூழலுக்கு தள்ளப்பட்ட சஞ்சு சாம்சன் ( 36) , ஸ்ரேயாஸ் ஐயர் (80 ) ரன்களை அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.

எனினும் ஆக்லாந்து மைதானம் மிக சிறியது என்பதால் 300 ரன்கள் என்பது கட்டாயம் வேண்டும். ஆனால் 4 ஓவர்கள் தான் மீதம் இருந்தது. அப்போது உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் அனைவருக்கும் ஆச்சரியம் தந்தார். 16 பந்துகளை மட்டுமே சந்தித்த சுந்தர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார். இதன் மூலம் வாஷிங்டன் சுந்தர் 13 வருட சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

அதாவது நியூசிலாந்து மண்ணில் அதிவேகமாக (16 பந்துகளில்) 30 ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் 38 ரன்களை அடித்தார். அதன்பின்னர் ஒரு வீரரால் கூட அடிக்க முடியவில்லை. ஏனென்றால் நியூசிலாந்து மண்ணில் அதிரடி காட்டுவது சாதாரணம் அல்ல. பிட்ச் அந்த அளவிற்கு கடினமாக இருக்கும்.

இதே போல கபில் தேவ்-ன் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மண்ணில் ஏற்கனவே கூறியதை போல அதிரடி காட்ட முடியாது. அங்கு கடந்த 1992ம் ஆண்டு கபில் தேவ் 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடினார். அதன்பின் சுரேஷ் ரெய்னா 2009-ல் 211.11 வைத்திருந்தார். தற்போது வாஷிங்டன் சுந்தர் 231.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.