சுப்மன் கில்லுக்கு 115 சதவீதம், இந்திய வீரர்களுக்கு 100 சதவீதம் அபராதம்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7-ந்தேதி முதல் 11- ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களும், இந்தியா 296 ரன்களும் சேர்த்தன. 2- வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா 234 ரன்னில் சுருண்டது.
இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மான் கில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கேமரூன் க்ரீன் அவரது கேட்சை பிடித்தபோது பந்து தரையில் பட்டதுபோல் இருந்தது. இதனால் 3-வது நடுவரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர். சுப்மான் கில்லும் சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இந்த போட்டியில் இரண்டு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசி முடிக்கவில்லை. இதனால் இரு அணிகளின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுப்மான் கில் ஐசிசி- யின் நன்னடத்தை விதிமுறையை மீறியதாக அவருக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சுப்மான் கில்லுக்கு 115 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா 5 ஓவர்களும், ஆஸ்திரேலியா 4 ஓவர்களும் குறைவாக வீசியிருந்தன. இதனால் அபராதத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.