Tamilசெய்திகள்

சுதந்திர தின விழாவில் நாச வேலை செய்ய தீவிரவாதிகள் சதி!

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு இந்து இயக்க பிரமுகர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், கொலை சம்பவங்களில் ஈடுபட்டதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது சென்னை பாடியில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பயங்கரவாதிகளான காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் சமீம் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார்கள்.

இவர்கள் 3 பேரையும் பிடிக்க சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், நோட்டீசுகளை அச்சடித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்தான் கடந்த 8-ந் தேதி குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் இருந்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளில் ஒருவரான அப்துல் சமீம், தனது கூட்டாளியான தவுபீக்குடன் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

இவர்கள் இருவரும் கேரளா வழியாக கர்நாடக மாநிலத்துக்கு தப்பிச் சென்றனர். இதுபற்றி துப்பு துலக்கிய போலீசார் உடுப்பியில் வைத்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2 பயங்கரவாதிகளும் பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். இதில் அப்துல் சமீமின் கூட்டாளிகளான காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் இருவரும் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு செல்போன்களை வாங்கி கொடுத்து உதவி செய்த 3 பயங்கரவாதிகளும் பெங்களூரில் பிடிபட்டனர். 3 பயங்கரவாதிகளையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக பெங்களூரில் 5 பேர் பிடிபட்டிருந்தனர். தமிழக கியூ பிரிவு போலீசார் கர்நாடக மாநில போலீசாருடன் இணைந்து நடத்திய தொடர் வேட்டையில் இதுவரை 17 பேர் சிக்கி உள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், தப்பிச்செல்ல உதவியவர்கள் என ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.

தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகளை போலீசார் தேடி பிடித்து கைது செய்து வருவதால் ஆத்திரம் அடைந்த அவர்களின் கூட்டாளிகளான மற்ற பயங்கரவாதிகள் குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

பயங்கரவாதிகள் 17 பேர் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களை கூண்டோடு கைது செய்ய தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் பயங்கரவாதிகள் அதிக அளவில் தஞ்சம் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம், கர்நாடகாவை போல கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 6 மாநிலங்களிலும் குடியரசு தினத்தன்று எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை சாவடிகள், பொதுமக்கள் தங்கும் இடங்கள் ஆகியவற்றில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போலீசார் கூட்டாக இணைந்து இந்த ஆபரேசனில் ஈடுபட்டு உள்ளனர்.

17 பயங்கரவாதிகளும் ‘சிலிப்பர் செல்’களை போல மக்களோடு மக்களாக பதுங்கி இருக்கலாம் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்கொலை படை தாக்குதலுக்கும் இந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இதன் காரணமாக பயங்கரவாதிகள் வி‌ஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் மாநில போலீசாரை உஷார்படுத்தி உள்ளனர்.

இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் அனைவரும் தங்களது சதி திட்டத்தை செயல்படுத்த தனி தனி குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் கியூ பிரிவு போலீசார் திரட்டியுள்ளனர்.

பெங்களூர் சிவாஜி நகரில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள உசேன் செரீப், தனியாக அமைப்பு ஒன்றை நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து சதி திட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்களது சதி திட்ட செயல்களை அரங்கேற்றுவதற்கு வசதியாக, பயங்கரவாதிகள் 200-ல் இருந்து 500 சிம் கார்டுகள் வரையில் வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இதன் பின்னணி பற்றியும் கியூ பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதன்மூலம் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள 17 பயங்கரவாதிகளும் அடுத்தடுத்து சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் இந்த வழக்குகள் அனைத்தும் விரைவில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *