Tamilசெய்திகள்

சுதந்திர இந்தியாவை உருவாக்க தகுந்த நேரம் இது – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள சுதந்திர தின அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

1942 ஆகஸ்டு 8-ந்தேதியன்று மகாத்மா காந்தி தொடங்கிய வரலாற்று சிறப்புமிக்க ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, 1947-ல் ஆங்கிலேய ஒடுக்குமுறையில் இருந்து தேசம் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள வழிவகுத்தது. ‘வெள்ளையனே வெளியேறு இயக்க’ உரையில் காந்தியடிகள் விடுத்த “செய் அல்லது செத்துமடி” என்ற அறைகூவல், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வளர்ந்து வந்த எழுச்சியின் உணர்வை வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றாக எழுந்து நிற்கச்செய்தது.

தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்வதற்கும், தங்களின் எதிர்காலத்தை வடிவமைத்து கொள்வதற்குமான பேராவலால் உந்தப்பட்ட இந்திய மக்களின் ஒன்றுபட்ட மன உறுதி, அதைத்தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான நிகழ்வுகள் 1947 ஆகஸ்டு 15 அன்று நாட்டின் சுதந்திரத்தை தவிர்க்க முடியாததாக மாற்றியது.

‘வெள்ளையனே வெளியேறு’ என காந்தியடிகள் அறைகூவல் விடுத்த 80 ஆண்டுகளுக்கு பின், விடுதலை போராட்ட வரலாற்றில் சிறப்புமிக்க தருணத்தை குறிக்கின்ற சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை இந்தியா கொண்டாடும் காலத்தில், நமது சாதனைகளை நாம் எண்ணிப்பார்ப்போம். நாம் சாதித்த முக்கிய செயல்களில் பெருமிதம் கொள்வோம். இன்னமும் நாம் வெற்றிகொள்ளவேண்டிய பல சவால்களை சமாளிக்கும் வழிகளை கண்டறிவோம். உலக அரங்கில் இந்தியா தற்போது முன்ணணி நாடாக திகழ்வதுடன், பல நூற்றாண்டுகால அடிமைத்தனம் மற்றும் காலனி ஆதிக்கத்திலிருந்து ஆகஸ்டு 15, 1947-ல் விடுதலை பெற்றதுடன் சுதந்திர நாடாக கடந்த 75 ஆண்டுகால பயணத்தில் பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்துள்ளது.

நமது நீண்ட நெடிய விடுதலை போராட்டத்தில் இருந்து நாம் ஊக்கம் பெறுவது அவசியம். நம்மிடம் உள்ள பெருமளவிலான மனித வளம், உலகிலேயே மிகவும் திறமை வாய்ந்ததாகும். எனவே, இந்தியா அதன் மக்கள் தொகையை பயன்படுத்தி, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்ப மற்றும் மனிதவளத்தின் முழுத்திறமையையும் பயன்படுத்திக்கொள்வது அவசியம். தற்போதைய வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், பல்வேறு துறைகளிலும் நாம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக பெருமிதம் அடைவதோடு, நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மீது கவனம் செலுத்தி அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும். போராடி பெற்ற சுதந்திரத்தை நாட்டின் அடித்தளம் வரை ஒளியேற்றி, வறுமை, எழுத்தறிவின்மை, பாலின பாகுபாடு, ஊழல் மற்றும் சமத்துவமின்மை போன்ற கொடுமைகளிலிருந்து விடுபடுவதே நமது முன்னுரிமை பணியாக இருக்கவேண்டும். அனைத்து வகையான சமத்துவமின்மைகளிலிருந்து விடுபட்டு உண்மையான சமத்துவ சமுதாயத்தை படைக்கவேண்டும் எனில், நாட்டை வளர்ச்சியடையச் செய்ய நல்லாட்சியும், நேர்மையான ஆளுகையும் அவசியமாகும். பண்டைக்கால இந்திய நாகரிகம், சமத்துவம், ஒற்றுமை மற்றும் உள்ளடக்கிய தன்மைகளைக்கொண்ட கலாசார நற்பண்புகள் நிறைந்ததாகும். தேசிய உணர்வு வழிகாட்டுதலுடன், நமது முன்னோர்களின் படைப்புத்திறனை முழுமையாக பயன்படுத்தி, வலுவான மற்றும் துடிப்புமிக்க தேசத்தை படைக்கவேண்டும்.

உலகளாவிய மற்றும் குறைந்த செலவிலான, தரமிக்க கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மீது நமது முழு கவனத்தையும் செலுத்தவேண்டும். தாய் மொழியை ஊக்குவிப்பது கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தி மேலும் உள்ளடக்கியதாகவும், சமத்துவமிக்கதாகவும் ஆக்கவேண்டும். நாம் ஊக்கம் பெறுவதற்கும், வருங்கால தலைமுறையினரை பாதுகாக்கவும், நமது பண்டைக்கால நம்பிக்கைகளை நோக்கி செல்வதை தவிர வேறு வழியில்லை. நாம் இயற்கையை பாதுகாப்பதுடன் நமது கலாசாரத்தையும் பாதுகாப்பதே ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும். நமது சுதந்திர போராட்டத்தின் முக்கியமான காலக்கட்டத்தை நாம் நினைவில் கொள்வோமேயானால், பாரத அன்னை மீதான நமது அளவற்ற அன்பும், உணர்வுகளும் தான் நம்மை பிணைக்கும். அடக்குமுறை மற்றும் உழைப்பை சுரண்டும் காலனி ஆதிக்கத்திலிருந்து நாட்டை விடுவிக்க நமது தலைசிறந்த சுதந்திர போராட்ட வீரர்கள் வழங்கிய பங்களிப்பை நமக்கு நாமே கூறிக்கொள்வதன் வாயிலாக நமது கடந்த காலத்தை திரும்பிப்பார்ப்பது நமது கடமையாகும். நமது பிரபலமான மற்றும் வெகுவாக அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு கண்ட சுதந்திரமான இந்தியாவை உருவாக்க இதுவே சரியான தருணமாகும். நாம் துடிப்புமிக்க, வளமான மற்றும் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு கூட்டாக தோள் கொடுக்கவேண்டியது நமது தார்மீக கடமையாகும்.