சுதந்திரத் தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் வி.பொன்ராமு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் 814 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் ரெயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 200 போலீசாரும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் 100 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் பெட்டிகளில் பெண் போலீசார் பயணம் செய்கின்றனர்.
சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய ரெயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, சேலம் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் வழித்தடங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் உபகரணங்களை பயன்படுத்தி தீவிர சோதனைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நுழைவு வாயில்களிலும் பயணிகள் அவர்களின் உடமைகளை சோதனைக்கு பிறகே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) வரை தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு கருதி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பார்சலுக்கு நேற்று முதல் தடை செய்யப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற பொருட்கள் ரெயிலில் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. பார்சல் குடோன், ரெயிலில் ஏற்றப்படும் பொருட்கள் போன்றவை கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு சுதந்திர தினம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதே போல பிற நகரங்களிலும், ரெயில்வே பார்சல் புக்கிங் நடைமுறைகள் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.