Tamilசெய்திகள்

சுடப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் பேரணியை தொடங்குவேன் – இம்ரான் கான் அறிவிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார்.

இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.

இம்ரான்கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒளிபரப்பக் கூடாது என அனைத்து ஊடகங்களுக்கும் பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில், லாகூரில் இருந்தவாறே இம்ரான்கான் பேசியதாவது:

நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும். நான் இங்கிருந்து (லாகூரில்) கொண்டே பேரணியில் உரையாற்றுவேன். எங்கள் பேரணி ராவல்பிண்டியை அடைந்தவுடன், நான் அதில் நேரில் கலந்துகொண்டு பேரணியை மீண்டும் தலைமையேற்று வழிநடத்துவேன். எங்கள் பேரணி, அடுத்த 10 முதல் 14 நாட்களுக்குள் ராவல்பிண்டியை வந்தடையும் என தெரிவித்தார்.