X

சுஜித் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிதி – திருச்சி கலெக்டர் வழங்கினார்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது குழந்தை சுஜித், கடந்த மாதம் 25-ந்தேதி மாலை வீட்டின் அருகே விளையாடியபோது, அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இதையடுத்து 29-ந்தேதி அதிகாலை அழுகிய நிலையில் சுஜித் பிணமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த அனுதாப அலைகளை ஏற்படுத்தியது. சுஜித்தின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி தமிழக அரசு நிவாரணமாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சுஜித்தின் பெற்றோரிடம், திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘குழந்தை சுஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கும். குழந்தை உடலை மீட்கவே இல்லை என்று பலரும் வதந்தி பரப்பி வரும் நிலையில், குழந்தை சுஜித்தின் உடலில் இருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுஜித்தின் குடும்பத்தினர் அரசு வேலை கேட்டுள்ளனர்’ என்றார்.

Tags: south news