தமிழகத்தில் முக்கிய நகரங்கள், வெளிமாநிலங்களுக்கு இடையே பார்சல் மற்றும் கொரியர் சேவையில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் லாரிகள், சரக்கு ஆட்டோக்களுக்கான டீசல், உதிரி பாகங்கள், 2-ம் நபர் காப்பீட்டு தொகை அதிகரிப்பு , சுங்க கட்டணம், தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ஆகியவற்றின் காரணமாக கட்டணங்களை படிப்படியாக உயர்த்தி வந்தன.
இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் நிதி சுமையை சமாளிக்கும் வகையில் நேற்று முன்தினம் முதல் கொரியர் நிறுவனங்கள் பார்சல் கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இதில் 10 கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம் 400 கி.மீ. தூரம் வரை 150 ரூபாயாக இருந்தது. தற்போது அது 170 ரூபாயாகவும், 600 கி.மீ. தூரம் வரை 170 ரூபாயாக இருந்தது தற்போது 200 ரூபாயகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கட்டணம் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இந்த எடைக்கு மேல் 100 கிலோ வரையில் 50 ரூபாய் முதல் 150 வரையும், 100 கிலோவுக்கு மேல் ஒரு டன் வரையில் 300 ரூபாய் முதல் தூரத்தின் அடிப்படையில் 800 ரூபாய் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரியர் நிறுவனங்கள் உள்ளூர் கவருக்கு 10 ரூபாயும், வெளியூர் பார்சலுக்கு 15 ரூபாயும், வெளி மாநில பார்சலுக்கு 30 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது.
எடைக்கு ஏற்ப கட்டணத்தை அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையே சுங்க கட்டண உயர்வால் லாரி கட்டண உயர்வும் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்க பொருளாளர் தன்ராஜ் கூறுகையில்,
பார்சல் , கொரியர் நிறுவனங்கள் தங்களின் செலவுகளில் அடிப்படையில் கட்டண உயர்வை அமுல்படுத்தி உள்ளன. லாரிகளை பொறுத்தவரை தேவைக்கு அதிகமாக உள்ளதால் தற்போது பெய்து வரும் மழையால் லோடுகள் கிடைப்பதில்லை. இதனால் கட்டண உயர்த்த மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் லாரிகளை இயக்குவதற்கான டீசல் உள்பட அனைத்தும் உயர்ந்து விட்டதால் சரக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
விரைவில் லாரி உரிமையாளர்கள் புக்கிங் ஏஜெண்டுகள், வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தி வாடகை உயர்வு அறிவிக்கப்படும் என்றார். லாரி வாடகை உயரும் போது அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் உயரும் என்பதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்னர்.