Tamilசெய்திகள்

சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்த கூடாது – ஜி.கே.வாசன் அறிக்கை

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் உயராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் வருகின்ற செப்டம்பர் 1-ந்தேதி முதல் சுங்கக்கட்டணத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது 8 விழுக்காடு வரை கட்டணம் உயரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை இழந்து, அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்வதால் வாகன உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.

சுங்கக்கட்டண உயர்வு வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கூட கொரோனா பேரிடர் காலத்தை கவனத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதுதான் நியாயமானதாக இருக்கும்.

எனவே மத்திய அரசு கொரோனா கால பாதிப்பை கவனத்தில் கொண்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.