சட்டவிரோத குடிநீர் ஆலை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து அனுமதி பெறாத குடிநீர் ஆலைகள் கண்டறியப்பட்டு சீல்வைக்கப்பட்டன. இது தொடர்பான அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிநீர் ஆலைகள் தரப்பு வாதம், அரசு அளித்த அறிக்கை மற்றும் வாதங்களின் அடிப்படையில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.
‘சீல் வைக்கப்பட்ட அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் அனுமதி வேண்டி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கேன் குடிநீர் ஆலை நிர்வாகம், விண்ணப்பத்துடன், 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பித்தால் அவர்களுக்கு உரிமம் தருவது பற்றி 15 நாளில் அரசு பரிசீலிக்க வேண்டும்.
குடிநீர் ஆலைகளை கண்காணிக்க மாவட்டந்தோறும் 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை மாவட்ட நீதிபதிகள் அமைக்க வேண்டும். இந்த குழுவினர் தங்கள் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரை கணக்கிட்டு மார்ச் 30ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.