காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி படுகொலை என்பது உலகையே உலுக்கிய சம்பவம். அரசியல், இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு மக்கள் வேதனைப்பட்டார்கள்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கூட அதிர்ச்சி அடைந்து மறுத்தார். தங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று கூட கூறினார்.
தற்போது சீமான் பேசி இருக்கும் கருத்தை விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் கூட ஏற்க மாட்டார்கள். சீமானின் பேச்சு காங்கிரசாரை மட்டுமல்ல அனைத்து மக்களையும் காயப்படுத்தும். புண்படுத்தும்.
தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி இருக்கிறார். மிகவும் கண்டிக்கத்தக்க வக்கிரமான பேச்சு. யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.
அவர் மீது அரசு சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து இருப்பது சரியான நடவடிக்கை. சீமான் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.