சீன நிறுவன ஸ்பான்சர்ஷிப்புக்கு அனுமதி – ஐபிஎல் நிர்வாகம் முடிவு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
போட்டி அட்டவணை மற்றும் கொரோனா பாதுகாப்பு தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை இறுதி செய்வது குறித்து ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு நேற்று ஆலோசனை நடத்தியது. வீடியோ கான்பரஸ் மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள், இதர விவரங்கள் வருமாறு:-
* ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒளிபரப்பு நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. எப்போதுமே இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை தான் அரங்கேறும். முதல்முறையாக இப்போது செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10-ந்தேதி) நடக்க உள்ளது.
* கொரோனா தொற்றினால் எந்த வீரராவது பாதிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
* ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 24 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
* சீன செல்போன் நிறுவனமான விவோ உள்ளிட்ட எல்லா ஸ்பான்சர்ஷிப்பும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
* வழக்கமாக இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக அதாவது இரவு 7.30 மணிக்கு தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டமும் அரைமணி நேரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும். மொத்தம் 10 நாட்கள் இரட்டை ஆட்டங்கள் இடம் பெறுகிறது.
ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி விட்டது. மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் விரைவில் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி அட்டவணை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த வார இறுதிக்குள் அது வெளியாகும் என்று தெரிகிறது.